பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹசைன் சாசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது.
ஆரம்ப விசாரணைகளில் இருந்து இருவரும் ஆரம்பத்தில் மிகவும் அழிவுகரமான தாக்குதலைத் திட்டமிட்டமை தெரியவந்துள்ளது.
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தை குறிவைக்கும் நோக்கில், மகாதேவ்புரா-வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மீது அவர்களின் பார்வை இருந்தது.
இதன்படி, பெரிய தொழில்நுட்ப பூங்காவில் குண்டை வெடிக்கவைப்பதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தடுத்து, இந்தியப் பொருளாதாரத்தை முடக்க அவர்கள் எண்ணம் கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த மென்பொருள் பூங்காக்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்திருக்கலாம் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே, அவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடிக்கடி வரும் பகுதியான ராமேஸ்வரம் கபேக்கு தங்கள் கவனத்தை மாற்றியுள்ளனர்.
இதற்காக குறைந்த விலையை கொண்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை சுமார் 3,000 ரூபாய்கள் வாங்கியுள்ளனர். இந்த வெடிப்பினால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று உயிரிழப்புகளையாவது எதிர்பார்த்தனர் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.