கனேடிய நகரமொன்றில், பற்றியெரிந்தபடி ரயில் ஒன்று பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.
என்றாலும், நீண்ட தூரம் பயணித்தபிறகே அந்த ரயில் நின்றது. ரயில் பாதைகளில் தண்டவாளங்களுக்கிடையே பதிக்கப்படும் மரக்கட்டைகள் இருந்த ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள பொருட்கள் இருந்த பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக, ரயில் பணியாளர்கள், தீப்பற்றிய ஐந்து பெட்டிகளை கழற்றிவிட்டுள்ளனர்.
10 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியதுடன், அப்பகுதியில் கடும் புகை சூழ்ந்ததால், ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டனர்.