ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா, இருவருக்கும் லண்டனில் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில், மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.
ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி, தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.
நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ரஜினி காந்த், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப், இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஜாம்நகரில் குவிந்தது.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா உட்பட வெளிநாட்டு பிரபலங்களும் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்புவிருந்தினர்கள் 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் முக்கிய வி.ஐ.பி.க்கள், திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.