வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்கப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப் 19ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து,13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி மணிப்பூரில் தேர்தல் நடைபெற்றது. அப்போது,மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப். 30ம் தேதி) மறு வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது.