Home விளையாட்டு சாதனை படைத்த – ஹைதராபாத் அணி

சாதனை படைத்த – ஹைதராபாத் அணி

by Jey

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 56 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57 வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீசியது.

தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். 2 ரன்களில் டி காக் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கே.எல்.ராகுலுடன் க்ருணால் பாண்டியா இணைந்து விளையாடினர். க்ருணால் பாண்டியா 24 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து, கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பதோனி மற்றும் பூரன் இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார்.

பதோனி 55 ரன்களும், பூரன் 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சா்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் களமிறங்கினர்.

அபிஷேக் 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் விளாசி 75 ரன்களும், ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் விளாசி 89 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர்.

ஹைதராபாத் அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், ஹைதராபாத் அணி, ஐபிஎல் தொடரில் 160-க்கும் அதிகமான ரன்களை 10 ஓவர்களில் சேஸிங் செய்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும் 100 ரன்களுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற சாதனையையும் ஹைதரபாத் படைத்துள்ளது.

 

related posts