Home விளையாட்டு பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழருக்கு

பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழருக்கு

by Jey

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. 12 நாட்கள் கடல் பயணத்திற்கு பிறகு ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் மார்செய் நகரை சென்றடைந்தது.

அதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு தர்ஷன் செல்வராஜா என்ற ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ளது.

இவர் கடந்த வருடம் பரிஸ் நகரில் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றதோடு, பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இவருக்கு இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாரிஸில் கோடைகால ஒலிம்பிக்ஸ் ஜூலை மாதம் 26 முதல் ஒகஸ்ட் மாதம் 11 திகதி வரை நடைபெறுகிறது. இதற்கு 10,500 விளையாட்டு வீரர்கள் 329 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதேவேளை, பாரா ஒலிம்பிக் ஒகஸ்ட் மாதம் 28 திகதி முதல் செப்டம்பர் மாதம் 08 திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் 549 போட்டிகளில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக்கில் 206 நாடுகளும், பாரா ஒலிம்பிக்கில் 184 நாடுகளும் பங்கேற்க உள்ளன.

பாரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Paralympic Games) என்பது உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்

 

 

related posts