பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார்.
தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று இளவழகன் கூறியுள்ளார்.
“போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு (Ilford)) குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.