ஈரானில் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளையும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய அதிகாரிகளின் மறைவையடுத்து ஈரான் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானுடன் பல்வேறு நாடுகள் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஈரான் ஜனாதிபதியின் மறைவையடுத்து, லெபனானில் மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் ஈரானின் அடுத்த அதிபர் யார் என்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுவருகிறது.
அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
இருப்பினும், இந்த நியமனத்திற்கு ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அனுமதி பெறப்பட வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் கூறப்படுகிறது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைக்கால ஜனாதிபதியால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, குறித்த குழுவின் உறுப்பினர்களாக இடைக்கால ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் காணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.