ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் கடந்த மாதம் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும், சோதனையும் அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் விடுக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
அதாவது, மொராபாடியில் உள்ள ராம் கிருஷ்ணா ஆசிரமம் நடத்தும் கோழிப்பண்ணையில் 770 வாத்துகள் உள்பட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,300 முட்டைகளும் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக போபாலில் உள்ள ஐசிஏஆர்- விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் எச்5என்1 இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பண்ணையில் உள்ள கோழிகள் மற்றும் முட்டைகள் அழிக்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.