கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் தல தோனியின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பினை பேட் கம்மின்ஸ் தவறவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதன்மூலம் சென்னை, மும்பை அணிகளை அடுத்து அதிக கோப்பைகளை வென்ற அணியாக கொல்கத்தா உள்ளது.
மேலும் ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்தாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். அதே வேளையில் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ரெக்கார்டுகளை முறியடித்த சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இதன்மூலம் தோனியின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பினை பேட் கம்மின்ஸ் தவறவிட்டார். 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பை என இரண்டையும் வென்ற ஒரே கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற கம்மின்ஸ் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தால் தோனியின் அந்த சாதனையை சமன் செய்திருப்பார்.
ஆனால் இந்த இறுதி போட்டியில் அடைந்த இந்த தோல்வியின் மூலம் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது மட்டுமின்றி, தோனியின் இந்த சாதனையை கம்மின்ஸ் சமன் செய்வார் என எதிர்பார்த்த கம்மின்ஸின் ரசிகர்களிடையே ஏமாற்றமும் மிஞ்சியுள்ளது.