நிலவும் அமைதியின்மையால் நியூ கலிடோனியாவில் முக்கிய சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 13 ஆம் திகதி முதல் வன்முறையாக வெடித்தது.
வன்முறையால் 07 பேர் உயிரிழந்ததுடன் போராட்டக்காரர்களுடனான மோதலில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறை காரணமாக நியூ கலிடோனியாவில் இதுவரை சுமார் 200 மில்லியன் யூரோ சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூ கலிடோனியா 1800 களில் இருந்து பாரிஸால் ஆட்சி செய்யப்படுகிறது.நியூ கலிடோனியாவில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீர்திருத்தங்கள்
குறித்து பிரான்ஸ் சட்டமியற்றுபவர்கள் விவாதித்ததன் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மை வன்முறையாக உருவெடுத்தது.
எவ்வாறாயினும் கடந்த வாரம் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வாக்களிப்பு சீர்திருத்தங்கள் கட்டாயப்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.
இதன்பின்னர் பதற்றங்கள் கணிசமானளவு குறைவடைந்ததுடன் நியூ கலிடோனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அவசரகால நிலை நீக்கப்பட்டது.