பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளவரசி டயானாவின் முன்னாள் வீட்டு பணியாளர் மௌட் பெண்ட்ரே அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் என்பனவே இவ்வாறு ஏலத்திற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
1981 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்கள் இதில் அடங்குவதோடு, 1981 முதல் 1985 வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும், பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.
பெவர்லி ஹில்ஸில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளது, இதன் மதிப்பு இலட்சக்கணக்கான டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கையால் எழுதப்பட்ட செய்திகள் இளவரசி டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை வெளிப்படுத்துகின்றன.
செப்டம்பர் 1982 ஆம் ஆண்டிலிருந்து ஒரு குறிப்பு இளவரசர் சார்லஸுடன் அவரது தேன்நிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.
1983 ஆம் ஆண்டுஉலங்கு வானூர்தி இருந்து கையசைத்து விடை பெற்ற விதத்தை அவர் விவரிக்கும் இரண்டு பக்க கடிதம், டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.
மனிதாபிமானப் பணிகளுக்காகவும், கவர்ச்சியான தன்மைக்காகவும் உலக அளவில் அறியப்பட்ட இளவரசி டயானா,அர்ப்பணிப்பு மிக்க தாயாராகவும் இருந்தார்.
1996 ஆம் ஆண்டு மன்னர் சார்லஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர்,1997 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். இந்த ஏலம் அவரது தனிப்பட்ட கதையின் ஒரு பகுதியை சொந்தமாக்கிக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.