Home இந்தியா அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே காணாதவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – திமுக

அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே காணாதவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – திமுக

by Jey

திமுக தலைவராக பதவியேற்றதில் இருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே காணாதவர் என சிறப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்த பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த சில மாதங்களிலேயே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேர்ந்தது.

திமுக தலைவரான பின்னர் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வெற்றியை தேடித் தந்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல், 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் என எதிர்க்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு வெற்றி தேடிக்கொடுத்தார் மு.க. ஸ்டாலின்.

இதையும் படியுங்கள் : ஜம்மு – காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்!

தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் திமுக கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை தேடித்தந்தவர் மு.க.ஸ்டாலின். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் உருவான அரசியல் வெற்றிடத்தை இவரால் நிரப்ப முடியுமா? என அரசியல் பண்டிதர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டின் நிகழ்காலமும், எதிர் காலமும் மு.க.ஸ்டாலினை வைத்து தமிழ்நாடு தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, சமூகநீதி, பொருளாதார வளர்ச்சியை கட்டிக்காப்பதற்கு நம்பத் தகுந்தவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்பதை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நடத்துவோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் அந்த ஏக்கத்தை தற்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து வாக்களித்து தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பிற தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக, தமிழ்நாட்டு மக்களின் ஒரே தேர்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மாநில உரிமைகளை காப்பதற்காக ஆளுங்கட்சியான அதிமுக செய்யத் தவறியதையையும் சேர்த்து மு.க. ஸ்டாலின்தான் செய்ய வேண்டி இருந்தது. அதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் மாவட்டமாக ஆய்வு சென்றபோது அதனை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியது திமுக தான்.

ஆளுங்கட்சியாக திமுக மாறியபோது தமிழ்நாட்டின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக குரல் எழுப்பியதோடு, மாநில உரிமைகளை பாதுகாக்கும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக உள்கட்சி பிரச்னையில் முடங்கி கிடந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டிய குரலையும் சேர்த்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிரொலித்தார்.

தமிழ்நாடு அரசியலில் இதற்கு முன்பு எந்த ஒரு முதலமைச்சரும் எதிர்க்கட்சியின் உறுதுணை இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் தன்னந்தனியாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை. அந்த உழைப்பையும், துணிச்சலையும் அங்கீகரிப்பதற்காகத்தான் தங்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மு.க.ஸ்டாலினை மக்கள் பார்க்கிறார்கள்.

செலுத்தும் வரியில் ஒரு ரூபாய்க்கு 29 காசுகளையே பாஜக அரசு திருப்பித் தந்தது. தேசிய பேரிடர் காலங்களில் பேரிடர் நிவாரண நிதியை நிறுத்தி வைத்தது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தியது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத ஆளுநரை நியமித்தது, மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட மேல்மட்ட பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தமிழ்நாட்டிற்கு எதிராக அவதூறு விஷம பிரசாரம் செய்தது போன்ற நெருக்கடிகளை பாஜக கொடுத்த போதும் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், காலைச் சிற்றுண்டி புதுமைப் பெண் என ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

 

 

related posts