தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் சம அந்தஸ்தையும் வழங்காது இலங்கை தீவை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது வெறும் கனவு மாத்திரமே என்பதை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன்,
”யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கவில்லை.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்காது ஐ.எம்.எப். பற்றி அல்லது வேறு விடயங்களை பற்றி பேசுவதால் எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கு இந்த நாட்டில் சம அந்தஸ்தை வழங்காதவரை விடிவுகாலம் பிறக்காது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஜனாதிபதியிடம் சலுகைகளை பெற்றுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஜனாதிபதியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ள முடியும் என எதிர்பார்க்கின்றனர்.
சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் கிடைத்துள்ளன.
சிலர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அந்த அறிக்கைகயை தமிழில் வெளியிடுகின்றனர்.
பல தசாப்தங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகிறோம். ஆனால், கொடூர குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குகின்றனர்.” என்றார்.