பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபா நிதியை ஒதுக்கிய தனது முதல் கையெழுத்தை
பிரதமர் மோடி, பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சௌத் பிளாக் பகுதிக்கு இன்று சென்றார். அப்போது, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் அவரை கைதட்டி வரவேற்றனர்.
பின்னர் அவர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை போட்டார்.
பிரதமரின் கிஷான் நிதி திட்டம் என்பது மத்திய வேளாண்துறையின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
இது பற்றி பேசிய பிரதமர் மோடி, “முதல் நடவடிக்கையாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.