இலங்கையில் வயது குறைந்தவர்களின் ஒன்லைன் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளாந்த அடிப்படையில் இந்தச் சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்றுவருவதாகவும், சிறுவர்கள் குறித்து தீவிர பாதுகாப்பு கவலைகளை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெயர் குறிப்பிடாத குறித்த அதிகாரி, இவ்வாறான சம்பவங்கள் குறித்து நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய உள்ளடக்கத்தின் தோற்றத்தைக் கண்டறியும் நவீன தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. எனினும், “எங்களிடம் ஒரு தரவுத்தளம் உள்ளது.
உலகில் வேறு இடங்களில் இதுபோன்ற வழக்குகள் கண்டறியப்பட்டவுடன், தரவுத்தளம் புதுப்பிக்கப்படும்.
ஸ்மார்ட் கையடக்கதொலைபேசிகளில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அத்தகைய உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டவுடன், உள்ளடக்கம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளது.
அதற்கேற்ப எங்கள் தரவுத்தளத்தில் தகவல்களைப் புதுப்பிக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒருவர் தனது அயலவர் ஒருவரின் பெண் குழந்தை தொடர்பான உள்ளடக்கத்தை இணையத்தில் வெளியிட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இது குறித்த உள்ளடக்கம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு தற்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.