ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுப்ரமணியம் ஜெய்சங்கர் இணைந்து இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு நிறைவுற்றுள்ள சில அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்தனர்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 106 வீடுகளை மெய்நிகர் ஊடாக ஜனாதிபதி மற்றும் ஜெய்சங்கர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் திருகோணமலையில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களையும் மக்களிடம் கையளித்தனர்.
இந்தியாவிடமிருந்து 06 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் கீழ் இலங்கையில் “கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்” (MRCC) தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மெய்நிகர் தகடுகளையும் வெளியிட்டனர்.
கொழும்பில் கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் ஒரு துணை மையம் மற்றும் காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாராவை, பருத்தித்துறை மற்றும் மொல்லிக்குளம் ஆகிய இடங்களில் ஆளில்லா நிறுவல்கள் உள்ளடங்கும்.
அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இதன்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தியாவின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட உள்ள சில திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் முக்கியான சில ஒப்பந்தங்களும் இந்தப் பயணத்தில் கையெத்திடப்படும் என்றும் தெரியவருகிறது.
அத்துடன், மோடியின் வருகை குறித்தும் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் எஸ்.ஜெய்சங்கர் இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.