தென்கிழக்கு துருக்கியில் காட்டுத் தீ பரவியதில் 5 பேர் பலியானதாகவும் 44 பேர் காயமுற்றதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அறுவடைக்கு பிறகு வயல்வெளிக்கு வைக்கப்பட்ட தீ பரவியதால் சினார் மாவட்டம் மற்றும் மசிடாகி மாவட்டத்தின் இடையே தீ பரவியுள்ளது.
பலத்த காற்று வீசியதில் அதிகளவிலான பரப்பில் தீ விரைவாக பரவியுள்ளது. இருந்தபோதும் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
காட்டில் தீ பரவுவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகளவிலான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை நிலவுவதால் இந்த அபாயம் கணிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் துருக்கியில் காட்டுத்தீ அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.