மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் செய்வினை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலத்தீவில் பில்லி சூனியம் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஜனாதிபதி முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இது தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மாலத்தீவை பொறுத்தவரை பில்லி சூனியம் வைப்பது என்பது கிரிமினல் குற்றம் கிடையாது.
ஆனால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ், இதற்காக 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்டவற்றின் மூலம் எதிர் தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.