நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரநிதித்துவப்படுத்தும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, காலியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வேட்புமனு வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கருத்து தெரிவித்தார்.
“அவர் ஒரு இடத்தில் இருப்பவர் அல்ல, ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருந்தார், தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கிறார்.
இது புதிய விடயம் அல்ல. நாங்கள் அனைத்தையும் அறிவோம். எங்களுடைய உறுப்பினர்கள் பலர் எங்களுடன் உறுதியாக இருக்கின்றனர். எனினும், சிலர் மாத்திரமே அங்கும் இங்கும் காணப்படுகின்றனர்.
அவர்கள் தொடர்பில் கட்சி தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.