எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712, 321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
736, 589 பேர் தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பத்திருந்த போதிலும் 24, 268 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வெளியிடுதல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் எனவும் எதிர்வரும் செப்டம்பர் 4, 5, 6ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.