மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி ஷான்ஷன் ஜப்பான் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்தது.
மிகக் கடுமையான புயல்கள், நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் பெரிய அளவிலான சேதங்கள் பற்றிய எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டிருந்தது.
மணிக்கு 252 km/h (157mph) வேகத்தில் அதிக காற்று வீசுயதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புயல் தாக்கத்தினால் 70 வயதுடைய ஒரு தம்பதியினரும், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்திய ஜப்பானில் உள்ள கமகோரியில் அமைந்துள்ள இவர்களது வீடு செவ்வாய்க்கிழமை தாமதமாக, சூறாவளியினால் அடித்துச் செல்லப்பட்டது.
வீட்டிலிருந்த மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களும் இரவு முழுவதும் மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு செய்திச் சேவையான NHK கூறியுள்ளது.
புயல் தாக்கத்தால் 12.5 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூஷுவின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 600 மி.மீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 255,00 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ககோஷிமா மற்றும் மியாசாகி மாகாணங்களில் குறைந்தது 39 பேர் காயமடைந்துள்ளதாக NHK தெரிவித்துள்ளது.
டொயோட்டா மற்றும் நிசான் போன்ற முக்கிய கார் தயாரிப்பாளர்கள் இன்று ஊழியர்களின் பாதுகாப்புக்காக தங்கள் ஆலைகளை மூடிவிட்டனர்.