கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெள்ளிக்கிழமை (30) பாடசாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அரேபிய கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக உருவாகலாம் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
புயல் தாக்கத்தால் கராச்சியின் சில பகுதிகளில் ஒரே இரவில் 147 மி.மீ. (5.79 அங்குலம்) அளவு மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், நகர முதல்வர் முர்தாசா வஹாப், குடியிருப்பாளர்கள் “தேவையற்ற நடமாட்டத்தை” தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் 32 பேர் பலி
இந்தியாவின் குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை சூறாவளி புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அடுத்த இரண்டு நாட்களில் அரபிக்கடலில் வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் 32 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன், 32,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் 1,200 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1976-க்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் அரபிக்கடலில் உருவாகும் முதல் சூறாவளி புயல் இதுவாகும்.
இதனிடையே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.