Home இலங்கை பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு …..

பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு …..

by Jey

பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்புகள் தபால் மூல வாக்களிப்பு செயன்முறையை பாதிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொதுச் சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த அவர்,

அரச நிதி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தற்போதைய முன்மொழிவுகள் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை

சம்பளத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும்” என்றார்.

அண்மைய முன்னேற்றங்கள் வாக்காளர்களை பாதிக்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த ஆணையாளர் நாயகம் தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசு ஊழியர்கள் நன்கு அறிந்திருப்பதாக கூறினார்.

மேலும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களை எந்த வகையிலும் திசைதிருப்பக் கூடாதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உறுதி செய்வது அனைத்து கட்சிகளின் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

சுயாதீன வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பல்வேறு தரப்பினரும் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts