பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார்.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பசிலுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
தான் நாட்டை விட்டு வெளியேறப் போவது தொடர்பில் பசில் ராஜபக்ச ஏற்கனவே கட்சிக்கு அறிவித்திருந்தார்.
எனினும் அவர் தனது மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்து, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியின் குடும்பத்துடன் இன்று இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.