வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதியை பாதுகாப்பது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று(16) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, ஏற்றுமதியையும் சீராக பேணினால் ரூபாவின் பெறுமதியை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லையெனில், நாட்டின் டொலர் கையிருப்பு பாதிக்கப்படும். அது மக்களை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுசெல்லும்.
நாங்கள் வாகன இறக்குமதிக்கு எதிரானவர்கள் அல்ல. எனினும், எமது கருத்தை வெளிப்படுத்தியமைக்கு நாங்கள் வாகன இறக்குமதியை தடுக்கின்றோமா என கேள்வி எழுப்பினார்கள்.
நாட்டின் டொலர் கையிருப்புக்கு ஆபத்து ஏற்படாது இருப்பின் வாகன இறக்குமதி நல்லது என்பதையே நாம் சுட்டிக்காட்டினோம். இரவில் நாம் விழுந்ததை போல் பகலில் விழ வேண்டும் என அவசியமில்லை.
இதேவேளை, ஜனாதிபதி இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
எம்மால், கிணற்றுத்தவளை போல செயற்பட முடியாது. எனவே, ஜனாதிபதி பல நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதை நாம் வரவேற்கின்றோம்.
ஏனைய நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தும் என்றால் அவை வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.