நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கட்டிடத்தின் உறுதித் தன்மையை அறியும் வகையில் இன்ஜீனியர்களையும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்திருக்கிற உயர் அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட்டு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடந்தது போலான துரதிர்ஷ்ட சம்பவம் ஒன்று இனிமேல் என்றும் நடைபெறக் கூடாது என்றும் அவர் கூறினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார். சுவரின் அடித்தளம் உறுதியாக இல்லாததால் இந்த விபத்து நடந்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும், நெல்லை காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுவர் விபத்து குறித்து மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின் முழுவிவரம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.