தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய இப்பாடல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என கூறியுள்ள தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு கொடுத்துள்ளது.
பொது நிகழ்ச்சிகளில் இசைவடிவமாக ஒலிக்கப்படுவதற்கு பதிலாக, பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் ’நீராருங் கடலுடுத்த’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு 1914 ஆம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் விழாக்களில் இந்த பாடல் பாடப்பட்டு வந்துள்ளது.
நீராருங் கடலுடுத்த பாடல் அரசு விழாக்களிலும் பாடப்பட வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் அண்ணாவிடம், தமிழ் ஆர்வலர்கள் மனு கொடுத்துள்ளனர். அவருக்கு பின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை பரிசீலித்து, 1970 ஆம் ஆண்டு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து நிச்சயம் இடம்பெறும் என அறிவித்தார். மனோன்மணியம் சுந்தரனாரின் இந்தப் பாடல், நாடக நூலான ‘ தமிழ் தெய்வ வணக்கம்’ என்ற தொகுப்பின் ஒரு பகுதி. தமிழின் பெருமையை உலகறியச் செய்யவும், இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கவும் இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.