தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தொற்று 85 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 226 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு 50-ஐக் கடந்துள்ளது.
இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி ஒமிக்ரான் பாதிப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம், கட்டுப்பாடுகள், மருந்துகள் இருப்பு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறியும் அவர், மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், எந்தெந்தமாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும், பாதிப்பின் தீவிரம் குறித்து அவர்களிடம் கேட்டறிகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுளை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிகரித்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால், அதுகுறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.