செம்மொழியாம் தமிழில் இருந்து, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளுக்கு, மொழியாக்கம் செய்யப்பட்ட 10 நூல்களின் வெளியீட்டு விழா நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது.
மத்திய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஸ் சர்கார் மொழியாக்க நூல்களை வெளியிட்டார். நூல்களை வெளியிட்டு பேசிய மத்திய இணை அமைச்சர் (Central Minister), செம்மொழியாம் தமிழ் மொழி, இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்றும், கலாசாரத்தின் செழுமையான பாரம்பரியமானது, கால மாறுதல்களையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்துள்ளது என்று கூறினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்த பழந்தமிழ் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அவை நேற்று வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், செந்தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கிய, இலக்கண நூல்களை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழியாக்கம் செய்வது தமிழாய்வு நிறுவனத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு மற்றும் பத்து பாடல் கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தொல்காப்பியம் போன்ற பழமையான இலக்கிய நூல் உலகின் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியத்தில் தொன்மையான நூலான தொல்காப்பியம் நூல் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வு நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையம் மூலமாக தமிழ் பழங்கால இலக்கணத்தை பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழியின் எழுத்து முறைகள், கிமு 250க்கு முந்தையவை என்று நம்பப்படுகிறது. சங்க கால தமிழ் பாடல்கள் 473 புலவர்களால் இயற்றப்பட்டது என்றும் அவை சுமார் 2,381 பாடல்களைக் குறிக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இயற்றியவரின் அடையாளம் அறியப்படாத 102 பாடல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.