வடக்கு மெக்சிகோவின் கோயாமே நகரத்திலிருந்து 12 புலம்பெயர்ந்தோர் சிஹுவாஹுவான் பாலைவனம் வழியாக வெளியேறினர்.அவர்கள் டெக்சாஸ் எல்லை வழியாக அமெரிக்காவைக் கடக்க எண்ணி பயணத்தை தொடங்கினர்.
அவர்களில் ஒருவனாக 14-வயது சிறுவனும் புறப்பட்டான்.அவன் எல்லையின் மறுபக்கத்தில் உள்ள தன்னுடைய குடும்பத்தினருடன் ஒன்றுசேர எண்ணி இந்த பயணத்தில் சேர்ந்தான்.
அவர்கள் அனைவரும் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி பயணத்தை தொடங்கினர்.
இந்த நிலையில், பயணத்தினிடையே அந்த குழுவை சேர்ந்த ஜேவியர் ரிகார்டோ என்பவர் தன் மனைவியிடம் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில் அவர் 1200 அமெரிக்க டாலர்களை கடத்தல்காரர்களுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார். அதன்மூலம், அந்த கடத்தல்காரர்கள் டெக்ஸாஸை அடைவதற்கான வழியை காட்டுவார்கள் என்றெண்ணி பணத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.
அதுவே அந்த பயணக்குழுவினருடன் ஏற்பட்ட இறுதி தொடர்பாக மாறியது. அதன்பின் புலம்பெயர்ந்தோர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அந்த சிறுவன் மட்டுமே பத்திரமாக பாலைவனத்தை கடந்து வந்து சேர்ந்துள்ளான்.அவனுடன் பயணம் மேற்கொண்ட பிற மனிதர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இது குறித்து அந்த சிறுவன் கூறியுள்ளதாவது, “பாலைவனத்தின் நடுவே எங்களை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. என்னை தவிர்த்து மற்றவர்களை தங்களுடன் கூட்டிச் சென்றது. ஆயுதம் ஏந்திய மற்றும் முக்காடு அணிந்த நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் தான் நானும் விடுவிக்கப்பட்டேன்” என்று கூறினான்.
காணாமல் போனவர்களை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, மெக்சிகோ கூட்டாட்சி அரசாங்கத்தால் முயற்சிகள் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆயினும்கூட, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுவதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கியுள்ளன. மெக்சிகோவின் இராணுவம் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
மெக்சிகோ பல ஆண்டுகளாக போதைப்பொருள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இப்போது மனித கடத்தல் என்பது ஒரு பெரிய வணிகமாகிவிட்டது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
மெக்சிகோ எல்லையில் உள்ள ஓஜினாகா பகுதியில் சிஹுவாஹுவா பகுதி அதிகாரிகளும் மீட்புப் பணியாளர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை சிஹுவாஹுவா மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.