கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு விதமாக மாறுபாடு அடைந்து உலக மக்களை அச்சுறுத்தி கொண்டு வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பல நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்வதை இலக்காக வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல புதுச்சேரியிலும் அனைத்து மக்களுக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் அம்மாநில அரசும், சுகாதார துறை ஊழியர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுச்சேரியின் கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, கோனேரிகுப்பம் என்கிற கிராமத்திலுள்ள மக்களுக்கு, செவிலியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றனர்.
அப்போது ஒரு வீட்டில் செவிலியர்கள் ஒரு வாலிபரை செவிலியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைத்தனர். ஆனால் அவர் தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாகவும், அதனை முடித்து விட்டு தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக வீட்டின் அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டு கையில் அரிவாளுடன் மரம் வெட்டுவதை போல நடித்துக்கொண்டிருந்தார்.
அதனையடுத்து தடுப்பூசி செலுத்த வந்தவர்கள், அவரிடம் தடுப்பூசி செலுத்தவேண்டும் கீழே இறங்கி வாருங்கள் என்று பலமுறை கூறினர். ஆனால் அவர் தடுப்பூசி போட பயந்து கொண்டு வேணுமென்றால் நீங்கள் மேலே ஏறி வாருங்கள் என்று கூறிவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்காமல் மேலே உட்கார்ந்து கொண்டார். ஏற்கனவே இதுபோல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்த மூதாட்டி ஒருவர் சாமி வந்ததுபோல் சுகாதார பணியாளர்களிடம் நடித்து அட்டகாசம் செய்த நிலையில், தற்போது இவரது நகைச்சுவையான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.