Home இந்தியா ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு

by Jey

நம்மில் பெரும்பாலானோருக்கு, மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கும் நோக்கில், வங்கிகளின் லாக்கரில் வைத்திருக்கும் வழக்கம் உள்ளது. அந்நிலையில், லாக்கர்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோர் புகார்களின் தன்மை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கி லாக்கர்கள் (Bank Locker)தொடர்பான வழிகாட்டுதல்களை சமீபத்தில் திருத்தியுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் லாக்கர்களை வங்கிகள் உடைக்கலாம்

திருத்தப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, லாக்கரை உடைத்து, லாக்கரில் உள்ளவற்றை, லாக்கர் உரிமையாளரின் நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவோ அல்லது வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தவோ வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு என்று கூறுகிறது. லாக்கர் உரிமையாளர் 7 ஆண்டுகள் வாடகை ஏதும் செலுத்தாமலும், அதனை திறக்காமலும் இருந்தால், லாக்கரை உடைத்து, சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவோ அல்லது வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தவோ வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு .

 

மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில், லாக்கரை திறப்பது குறித்து, வங்கி லாக்கரை வைத்திருப்பவருக்கு, கடிதம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் ஃபோன் எண்ணுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. கடிதம் டெலிவரி செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது லாக்கரை வாடகைக்கு எடுத்தவர் கண்டுபிடிக்கப்படாவிட்டாலோ, வங்கி லாக்கர் வாடகைதாரருக்கோ அல்லது லாக்கரில் வைத்திருக்கும் பொருட்களுடன் தொடர்புடையவருக்கோ, நோட்டீஸிற்கு பதிலளிக்க நியாயமான கால அவகாசம் அளிக்கப்படும்.

வங்கியின் அதிகாரி மற்றும் இரண்டு சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் லாக்கரை திறக்க வேண்டும் என்றும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களில், வங்கிகளின் அலட்சியம் காரணமாக லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான அவர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது. இருப்பினும் வங்கிகள் இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்க தகுந்த ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

லாக்கர்கள் இருக்கும் வளாகத்தின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் வங்கியிடமே இருக்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி நடந்தால், வங்கிகளின் பொறுப்பு அவர்கள் லாக்கருக்காக வசூலிக்கும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

இது மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கிகள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறையை சேர்க்க வேண்டும். அதன் கீழ் லாக்கரை வைத்திருக்கும் வாடிக்கையாளர் சட்டவிரோதமான அல்லது ஆபத்தான பொருட்களை லாக்கரில் வைத்திருக்க முடியாது.

related posts