இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாட்டை துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் பிணையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பழிவாங்கும் நோக்குடன் திமுக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது அதிகார வெறியாட்டம், பாசிச்சத்தின் உச்சம் என சாடியுள்ள சீமான், சமூக ஊடகம் மூலமாக அவர் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தை திமுகவினால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
சிறை தண்டனை மூலம் சாட்டை துரைமுருகனை உளவியலாக முடக்க நினைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசின் இத்தகைய எண்ணத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அவர், மாற்றுக் கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்வோரை சிறைவாசம் மூலமாக சித்ரவதை செய்ய நினைப்பது ஆளும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஜனநாயக மாண்புகளும், கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்திருப்பதாகவும் சீமான் அறிகையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் திமுக அரசின் இத்தகைய கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பாஸ்கான் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், அவர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கைதைக் கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.