அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மூன்றாவது அலையின் தாக்கம் அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. கோவிட்-19 மற்றும் ஓமிக்ரான் (Covid-19 / Omicron) பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி எழுந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது விமானப் போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்து வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பல வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் இருந்து புது தில்லி மற்றும் மும்பைக்கான விமானங்களின் எண்ணிக்கையை இண்டிகோ (Indigo) நிறுவனம் குறைத்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த வழித்தடங்களில் தினசரி விமான சேவையை குறைக்க உள்ளதால், விமான பயணிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனுடன் விமான கட்டணமும் அதிகரிக்கப்படலாம்.
அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, விமானங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு, மம்தா பானர்ஜி அரசு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து புது தில்லி மற்றும் மும்பைக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது.
இண்டிகோ அளித்த தகவலின்படி, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, துர்காபூர் மற்றும் பாக்டோக்ராவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே (Indigo Limited its Flights) விமான சேவை மேற்கொள்ளப்படும். இண்டிகோ தனது விமான சேவைகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. இதனால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன், இந்த வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படுவதால், வரும் காலத்தில் விமான கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தகவல் தெரிவித்து வருவதாக இண்டிகோ நிறுவனம் தகவலைத் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவர்களின் விமானம் ரத்துசெய்யப்பட்டு இருந்தால், அவர்கள் இண்டிகோவின் இணையதளத்திற்குச் (IndiGo’s Website) சென்று பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது தங்கள் விருப்பப்படி வேறு விமானத்தைத் தேர்வு செய்யலாம். இதற்காக, பயணிகள் www.goindigo.in இண்டிகோ இணையதளத்திற்குச் சென்று, “பிளான் பி” (Plan B) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.