விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 44). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
பட்டாசு தொழிற்சாலை வருவாய் கோட்டாட்சியர் உரிமம் பெற்று 6- அறை களில் சிறிய ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆலை உரிமையாளர் கருப்பசாமி, மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசுக்கு தேவையான மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்டபோது உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி, கண்ணகுடும்பன் பட்டியைச் சேர்ந்த காசி, கொம்மிங்கா புரத்தை சேர்ந்த பெருமாள்,சரஸ்வதி,அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செந்தில்குமார், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முதல் சிகிச்சை அளித்து பாளையங் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்ட பொம்மையா புரம் சீனிவாசன் மனைவி அய்யம்மாள் (வயது 45), ஜெகநாதன் மனைவி சரஸ்வதி (வயது 41) ஆகியோர் அனுப்பபட்டனர். அங்கு அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். சாத்தூர் அரசு மருத்துவ மனையில் காசி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.