கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி (vijay sethupathi) மீது சக நடிகர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மகா காந்திக்கும் விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் தான் ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவருக்குள்ளும் தான் கைகலப்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
பின்னர் விமான நிலையத்தில் இருந்த சிஆர்பிஎஃப் அதிகாரிகள் உடனடியாக இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பின்னர் மகா காந்தி விஜய் சேதுபதி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதாவது பெங்களூர் விமான நிலையத்தில் பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தனது சாதியை பற்றி தவறாக பேசினார் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், சம்மனை ரத்து செய்யக் கோரியும் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மகா காந்தி விளம்பர நோக்கத்துடன் தான் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் என்றும் நஷ்ட ஈடாக மூன்று கோடி இழப்பீடு கேட்டிருக்கிறார்.
இதனால் அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினர்.
இதுகுறித்து மகா காந்தி கூறுகையில் இந்த அவதூறு வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல, உண்மையில் பாதிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன் என்று கூறினார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி-11ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டு இருக்கிறது.