ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றுாரில், 1904 அக்., 4ம் தேதி பிறந்தவர், குமரன். நெசவுத் தொழிலில் ஈடுபட்ட அவர், போதிய வருமானம் இன்றி, மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்றார்.காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.
1932ல் காந்தியின், ‘சட்ட மறுப்பு இயக்கம்’ துவங்கியது. திருப்பூரில், தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில், குமரன் பங்கேற்றார்.
ஜன., 10ல், கையில் தேசியக் கொடியை ஏந்தி, அணி வகுத்து சென்றார். அப்போது, காவலர்களால் தாக்கப்பட்டார். மண்டை பிளந்தும், கையில் தேசியக் கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்தார்.
இதனால், ‘கொடி காத்த குமரன்’ என போற்றப்பட்டார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஜன., 11ம் தேதி தன், 28வது வயதில் உயிரிழந்தார். திருப்பூர் குமரன் காலமான தினம் இன்று.