ஜப்பானில் உள்ள பூங்காவில், ஆறு மாதங்களுக்கு முன் பிறந்த இரட்டை பாண்டா குட்டிகளை காண, பார்வையாளர்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, பொழுதுபோக்கு மற்றும் உயிரியல் பூங்காக்களில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், டோக்கியோவில் மூடப்பட்டிருந்த யுனோ உயிரியல் பூங்காவில், கடந்த ஜூன் மாதம், ஒரு பாண்டா கரடி, இரட்டை குட்டிகளை ஈன்றது.
ஆண் கரடி குட்டிக்கு ‘ஜியாவ் ஜியாவ்’ என்றும், பெண் கரடி குட்டிக்கு ‘லேய் லேய்’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. பின், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பூங்கா திறக்கப்பட்டும், பாண்டா குட்டிகளை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக, அந்த உயிரியல் பூங்கா நேற்று முன்தினம் மீண்டும் மூடப்பட்டது. முழு பூங்கா மூடப்பட்டும், பாண்டா குட்டிகளை காண்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று பார்வையாளர்களுக்கு முன் வந்த பாண்டா குட்டிகள், மூங்கில் மரத்தில் விளையாடி ஆட்டம் போட்டன. அவற்றை, மக்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.நாளை வரை மட்டுமே, இந்த குட்டிகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.