தேசிய உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனராக, பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, 10 ஆண்டுகளாக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.
இந்நிலையில், புதிய இயக்குனராக சென்னை பல்கலை கணினி அறிவியல் பிரிவு பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று பொறுப்பேற்றார். அப்போது, ஐ.ஐ.டி., நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
புதிய இயக்குனர் காமகோடி கூறியதாவது:தேசிய தரவரிசை பட்டியலில், முதலிடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில், ஐ.ஐ.டி.,யை மேலும் முன்னிலை நிறுவனமாக மாற்றுவேன். மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெரு நிறுவனங்களுடன் தொடர்பை வலுப்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற பணிகள் மேலும் மேம்படுத்தப்படும்.
நாட்டின் நிர்வாகம் மற்றும் மக்களின் தேவைஅறிந்து, அதற்கேற்ற ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை ஐ.ஐ.டி.,யை, மத்திய அரசின் சீர்மிகு நிறுவனமாக தொடர்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.