இதுகுறித்து, சென்னையிலுள்ள ஜப்பான் துணை துாதர் மசாயுகி தாகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியா — ஜப்பான் இடையே, முறையான துாதரக உறவு 1952ல் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு பின், சான்பிரான்சிஸ்கோ அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பதில், ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்தில் இணைவதை உறுதி செய்ய வேண்டும் என கருதி, ஜப்பானுடன் இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தை இந்தியா முடிவு செய்தது.
இதுவே ஜப்பானின் நீண்ட கால நட்புக்கு அடித்தளம். துாதரக உறவுகளை நிறுவுவதற்கு முன், வணிகம், கல்வி மற்றும் கலாசார பரிமாற்றங்கள் வாயிலாக, இரு நாட்டு மக்களிடையே நல்லெண்ணம் ஆழமாக இருந்தது.இந்தியா — ஜப்பான் இடையேயான துாதரக ரீதியான உறவு துவங்கி, நடப்பு 202௨ம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஆண்டு நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் முக்கியத்துவம் பெறும்.
இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவையும், இந்தியா — ஜப்பான் துாதரக உறவின், 70வது ஆண்டு விழாவையும் ஒன்றாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இரு நாடுகளுக்கும் இடையேயான 70வது ஆண்டு விழா, ‘நமது நுாற்றாண்டு விழாவுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற, கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.ஜனநாயக நாடுகளாகிய நாம், உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க, ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஜப்பானும் ஒன்று. தமிழகத்தில், 600 ஜப்பானிய வணிக நிறுவனங்கள் உள்ளன.நம் பொருளாதார கூட்டாண்மையால், இந்திய — பசிபிக் மற்றும் உலக அளவில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.