தமிழகம் முழுதும் கல்லுாரி மாணவ – மாணவியருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சு போட்டி நடத்தப்படும்’ என, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:சிறுபான்மை ஆணையம் கல்லுாரி மாணவ – மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம், சமூக நீதி, ஜாதியற்ற தமிழகம், சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழர் பண்பாடு போன்ற உன்னத கொள்கைகள், லட்சியங்களின் முக்கியத்துவத்தை, இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அனைத்து கல்லுாரி மாணவர்களும், அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கலாம். முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 10ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல்பரிசு பெற்ற மாணவர்கள் பங்கு பெறும் மாநில அளவிலான போட்டி, இறுதியில் நடைபெறும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசையும், சான்றிதழையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார்.இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்