பிப்ரவரி 1, 2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிப்ரவரி 1-ம் திகதி பொது பட்ஜெட்டுடன் கூடவே ரயில்வேக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் நிலையில், அதில் உள்ள எதிர்ப்பார்ப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் திகதி தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், மத்திய அரசு இந்த முறை ரயில்வேக்கான செலவினத்தை 15-20 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, ரயில்வே துறைக்கு, 1,10,055 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இம்முறை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட்டை (Union Budget 2022) முன்னிட்டு, ரயில்வே தொடர்பான பல துறைகளில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டில் ரயில்வேக்கு ரூ.26,338 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காலத்தில் வருவாய் இழப்புகளை சந்தித்த போதிலும், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரயில்வே தனது வருவாயை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்த்து, வேறு விதமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரயில் பட்ஜெட்டில் நீண்ட தூரப் பயணத்திற்காக சுமார் 10 புதிய இலகுரக ரயில்கள் (அலுமினியத்தால் அமைக்கப்பட்டது) அறிவிக்கப்படலாம். டெல்லி மற்றும் வாரணாசி இடையே புல்லட் ரயில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கோவிட் காலத்தில், ரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலமாக பெரும்பாலான வருவாய் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பயணிகள் ரயில்களின் கட்டணைத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, பல்வேறு சரக்கு வழித்தடங்களைத் ஏற்படுத்த ரயில்வே மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களின் ரயில் இணைப்பை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக, சில தனியார் நிறுவனங்களை அரசு ஈடுபடுத்தக் கூடும். மின்சாரம் மற்றும் டீசலை சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் இந்திய ரயில்வேயில் சூரிய சக்தி திறன் மேம்படுத்தப்படும்.
இதனுடன், தேசிய ரயில் திட்டத்தில் 2030க்குள் 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கு அறிவிக்கப்படும். PPP மாதிரியின் மூலம், அதாவது அரசு தனியார் கூட்டாளித்துவத்தின் மூலம், ரயில் நிலையங்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும். இதற்காக 12 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியுளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு, கட்டணம் தொடர்பான விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்க, ரயில் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்துவது குறித்தும் அரசு அறிவிக்கலாம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் தேஜாஸ் போன்ற பல திட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.