Home உலகம் நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது

நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது

by Jey

‘நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது,” என, பிரிட்டன் எம்.பி., நஸ்ரத் கனி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி.,யான நஸ்ரத் கனி, 2018ல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2020 பிப்ரவரியில் போரிஸ் ஜான்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அப்போது, நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இது குறித்து நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது கட்சியின் பார்லி., கொறடா எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, கட்சி எம்.பி.,க்களுக்கு அசவுகரியமாக உள்ளதாக, அதற்கு காரணம் கூறினார். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் என் எதிர்கால அரசியல் வாழ்வு பாழாகக் கூடும் என, சிலர் எச்சரித்தனர்.

அதனால் நான் மவுனமாக இருந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.நஸ்ரத் கனியின் இந்த குற்றச்சாட்டை பழமைவாத கட்சியின் பார்லி., கொறடா மார்க் ஸ்பென்சர் மறுத்துள்ளார். பழமைவாத கட்சியில் மத, இன பாகுபாடு கிடையாது என்றம் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே ‘பார்ட்டி’ பிரச்னையில் சிக்கியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நஸ்ரத் கனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்து, பின் பிரிட்டனில் குடியேறியவர்.

 

related posts