திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் கடந்த 24-ந் தேதி பதுங்கி இருந்த சிறுத்தை 2 விவசாயிகள் உள்பட 5 பேரை தாக்கியது. இதனால் அந்த கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர்.
இதையடுத்து வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சோளக்காட்டில் இருந்து தப்பிய சிறுத்தை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. நேற்று 3-வது நாளாக வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் சிறுத்தை எங்கு பதுங்கியுள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரவு, பகலாக சிறுத்தையின் இருப்பிடம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க நிலையில் உள்ள சிறுத்தையை வனத்துறையினர் தற்போது மீட்டுள்ளனர். 2 மயக்க ஊசி செலுத்திய பிறகே சிறுத்தை மயங்கி உள்ளது.