இந்தியா – இஸ்ரேல் இடையே ஆழமான நட்புறவு நிலவுகிறது; இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி,” என, மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னெட் கூறியுள்ளார்.
இஸ்ரேல் – இந்தியா இடையே முழுமையான துாதரக உறவுகள் 1992ல் துவங்கி, நேற்று முன்தினத்துடன் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன; இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் கூறியதாவது:இந்தியா – இஸ்ரேல் இடையே ஆழமான நட்புறவு நீடித்து வருகிறது. இந்த உறவுக்கு முடிவு என்ற பேச்சே கிடையாது.
இந்த நட்புறவு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும்.இந்தியா – இஸ்ரேல் இடையேயான கலாசார, ராணுவ, பொருளாதார உறவுகள் வலிமையாக உள்ளன.
இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படும் என் நண்பர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இரு நாடுகளின் அளவில் பெரும் வேறுபாடு இருக்கலாம். ஆனால், இரு நாடுகளின் மக்களிடையேயான உறவை அளவிட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.