நகர்ப்புற நில அளவை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், நில வரைபடங்கள் கிடைக்காமல், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில், அனைத்து நிலங்களும் நில அளவைத் துறையால் அளவீடு செய்யப்பட்டு, எல்லைகள் வரையறை செய்யப்படுகின்றன.இதன் பட்டா, நில அளவை வரைபடங்களை, பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்து, இணையதளத்தில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ஊரக பகுதி நிலங்களின் பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றை, இணைய தளத்தில் பார்க்க முடிகிறது.நகர்ப்புற நில அளவை வரைபடங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:நகர்ப்புற நில அளவை முடித்து, அது தொடர்பான பட்டா, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பட்டா விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன; நில அளவை வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதனால், நகர்ப்புற நிலங்களின் வரைபடங்களை, இணையதளத்தில் பெற முடியவில்லை. இதற்காக வருவாய் துறை அதிகாரிகளை அணுகி, ‘கவனித்தால்’தான் வேலை முடியும் சூழல் நிலவுகிறது. இந்த விஷயத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து, லஞ்ச ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.