தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், விக்ரம் நடித்த அந்நியன், விஷ்ணு விஷாலின் ராட்சசன் ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன.
விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் கைதி உள்ளிட்ட மேலும் சில படங்களும் இந்திக்கு போகின்றன. இதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமாரை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகளும் முடிவாகி விட்டது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.
இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். விமான நிறுவன அதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து சூரரை போற்று படம் வந்தது. இதில் சூர்யா ஜோடியாக அபர்ணா பால முரளி நடித்து இருந்தார். இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது.