‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் வாயிலாக செய்யும் பிரசாரம், தி.மு.க.,வுக்கு ஆதரவு பெருக்கிடும் ஓட்டுக்களுக்கான அச்சாரம்’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: தி.மு.க., அரசின் திட்டங்கள் உள்ளாட்சி வரை ஊடுருவி, ஒவ்வொரு ஊரிலும் உள்ள குடும்ப நபர்கள் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும். இந்த உன்னத நோக்கமே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் நமக்கான இலக்கு. ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, வெற்றியை உறுதி செய்யும் பிரசாரம் மேற்கொள்கிற நேரம் இது.
மக்கள் பார்வையிடும் குடும்ப, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் பிரசாரத்தை கச்சிதமாக பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாத போது, உண்மையை பேச நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள். தயக்கத்தை தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டு சேர்ப்போம்.
வாட்ஸ் ஆப்’பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜால சதியை முறியடித்து, நம் சாதனையை பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ் ஆப் செய்திகள் நுாறாக, ஆயிரமாக, லட்சங்களாக பகிரப்படும்போது, அது வெறும் வாட்ஸ் ஆப் செய்தியன்று; தி.மு.க.,வுக்கு ஆதரவு பெருக்கிடும் ஓட்டுகளுக்கான அச்சாரம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில், ஓட்டு சேகரிக்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டரும், இதை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள். கூட்டணி கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவர். இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.