திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அதே போல் திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் திருப்பதி இல் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இன்று காலை 9 மணி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.